Thursday 14 February 2013

விவேகானந்தர் இல்லத்தை பற்றிய நிகழ்வுத் தொகுப்புகள்

1. விவேகானந்தர் இல்லம்,கேஷில் கெர்னன் என்றும்,அதற்ககு முன்பு ஐஸ் ஹவுஸ் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.சென்னை திருவல்லிக்கேணியில் காமராஜர் சாலை என்று தற்போது அழைக்கப்படும் மெரினா கடற்கரைச் சாலையில் இந்த இல்லம் அமைந்துள்ளது.

2.ஐஸ் ஹவுஸ்,அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்த தியூடர் ஐஸ் கம்பெனியின் நிறுவனரான பிரடெரிக் தியூடர் என்பவரால் 1842 ல் கட்டப்பட்டது.

3.தியூடர் ஐஸ் நிறுவனத்தால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
ஐஸ் கட்டிகளைச் சேமித்து வைப்பதற்காகக் கோபுர வடிவ கட்டிட அமைப்பு கொண்ட கிடங்காக ஐஸ் ஹவுஸ் முதலில் கட்டப்பட்டது.

4.இந்தியாவில் கொல்கத்தா,மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தியூடர் ஐஸ் நிறுவனம் மூன்று  ஐஸ் ஹவுஸ்கலை அமைத்தது.அவற்றில் சென்னை ஐஸ் ஹவுசைத் தவிர பிற  ஐஸ் ஹவுஸ்கல் தற்போது இல்லை.

5.சிறந்த முறையில் ஐஸ் கட்டிகளைத் தயாரிக்கும் தொழில் நுட்பம் இந்தியாவிலேயே வந்து விட்டதால் தியூடர் ஐஸ் நிறுவனத்தின் ஐஸ் கட்டித் தொழில் 1880 ம் ஆண்டுக் காலத்தில் முடிவுக்கு வந்தது.எனவே,ஐஸ் கட்டிகளைச் சேமிக்கும் கிடங்காக ஐஸ் ஹவுஸ் பயன்படுத்தப்பட்டு வந்ததும் கைவிடப்பட்டது.

6.இதன் பிறகு,செல்வந்தரும்,வழக்கறிநறும்,பின்னாளில் சுவாமி விவேகானந்தரின் சீடருமான பிலிகிரி ஐயங்கார் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தின் உரிமையாளர் ஆனார்.

7.அவர்,சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியான தன்னுடைய நண்பர் கெர்னனின் பெயரைக் குறிக்கும் வகையில் ஐஸ் ஹவுசுக்கு கேஸில் கெர்னன் என்று பெயர் மாற்றம் செய்தார்.

8.ஐஸ் கவுஸை தங்குவதற்கு ஏற்ற ஒரு வீடாக மாற்ற பிலிகிரி ஐயங்கார் விரும்பினார்.இதற்காக அவர் கட்டிடத்தை சுற்றிலும் வட்ட வடிவில் தாழ்வாரங்களை இணைத்துக் கட்டினார்.ஆனால்,காற்றோட்டக் குறைவு போன்ற பல்வேறு கட்டிட அமைப்புச் சிக்கல்களினால் அவருடைய விருப்பம்
நிறைவேறவில்லை.

9.பிலிகிரி அய்யங்கார்,ஏழைகள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கியவர்களுக்கான ஒரு புகலிடமாக ஐஸ் ஹவுஸை மாற்றி அமைத்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை நடத்துவதற்காகவும்,கட்டிடப் பாரமரிப்புக்காகவும் சில பணியாட்களை அவர் வேலைக்கு அமர்த்தினார்.இதற்காக,சென்னையை சேர்ந்த ஸ்ரீரங்க கோபாலன் சீனுவாச மூர்த்தி ஐயங்காரிடமிருந்து 7,000/- ரூபாய் கடன் பெற்ற அவர்,1893 - ம் ஆண்டில் 'மைசூர் அய்யங்கார் அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கொண்ட நிதி ஒன்றையும் ஏற்படுத்தினார்.

10.ஐஸ் ஹவுசில் சுவாமி விவேகனந்தர் தங்கியிருந்தபோது
அவரை ஐஸ் ஹவுஸ் மாணவர்களாக இருந்தவர்களுள்
குறிப்பிடத்தக்கவரும்,அறிஞரும்,அரிசியல் தலைவரும்,சுதந்திர
இந்தியாவின் இரண்டாவது கவர்னர் ஜெனரலுமான
திரு.C.ராஜகோபாலாச்சாரியார் சந்தித்தார்.

11.1893 - ல் நடைபெற்ற சிகாகோ சர்வமத மகாசபையில் கலந்துகொண்டு வரலாற்றுப் புகழ்பெற்ற சொற்பொழிவு ஆற்றிய பின்னர்,1897 -ல் தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தார்.அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

12.சுவாமி விவேகானந்தர்,1897 பிப்ரவரி 6 முதல் 15 - ம் தேதி வரை ஐஸ் ஹவுசில் தங்கியிருந்தார்.

13.சுவாமி.விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்ததைக் கொண்டாடும் வகையில் ஐஸ் ஹவுஸ் பகுதியிலிருந்த மீனவர்கள் தங்கள் இல்லங்களில் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தனர்.

14.சுவாமி.விவேகானந்தர் ஐஸ் ஹவுசில் தங்கியிருந்தபோது தன்னைக் காண வந்த அன்பர்கள் பலரிடம் கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்கள் பல நிகழ்த்தினார்.சென்னையில் அவர் ஆற்றிய புகழ்பெற்ற ஒன்பது
சொற்பொழிவுகளைச் சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் வெளியீடாக 'கொழும்பு முதல் அல்மோரா வரை' என்னும் நூலில் காணலாம்.
எழுச்சியூட்டும் இந்தச் சொற்பொழிவுகள் இந்திய விடுதலைப்போரில் கலந்து கொள்ளும் உணர்வைப் பல்வேறு மக்களிடம் எழுப்பின.

15.சுவாமி.விவேகானந்தரைக் காணவந்த அன்பர்கள் அவரைச்
சந்திப்பதற்க்குரிய இடமாக ஐஸ் ஹவுஸ் வளாகத்தில் ஒரு சிறப்புப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.ஐஸ் ஹவுசில் சுவாமிஜி,பெரும்பாலான நேரங்களில்,தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் அவரைக் காண வந்த பக்தர்களும்,அன்பர்களும் புடைசூழ காணப்பட்டார்.

16.சுவாமி.விவேகானந்தர் சிறிது நேர தரிசனத்திற்காக எண்ணற்ற அனபர்களும்,பக்தர்களும் ஐஸ் ஹவுசில்அவ்வப்போது கூடியிருப்பார்கள்.அவரைக் காணும்போதெல்லாம் அனைவரும் ஒருமுகமாக வணங்கித் தங்கள் மதிப்பையும்,அன்பையும் வெளிப்படுத்துவார்கள்.

17.சுவாமி.விவேகானந்தரை 6-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற நாயன்மார்களுள்
ஒருவரான திரு.ஞானசம்பந்தரின் மறு அவதாரமாகவே பலர் கருதினர்.
சுவாமிஜி இத்தகைய ஒப்பீடுகளைச் சிறிதும் பொருட்படுத்தாத போதிலும்
பல எளிய மக்கள் அவருடைய தரிசனத்திற்காக ஐஸ் ஹவுஸுக்கு வந்ததற்கு
ஆதாரக் குறிப்புகள் உள்ளன.

18.ஒருமுறை ஐஸ் ஹவுசில் சுவாமி விவேகானந்தர் ஆழ்நிலைச் சாமாதியில்
ஆழ்ந்ததை ஓர் அன்பர் கண்டார்.

19.ஐஸ் ஹவுஸில் தங்கியிருந்தபோது சில நாட்கள் காலையில் சுவாமி
விவேகானந்தர் அன்பர்கள் சிலருடன் கடல் நீராட மெரினா கடற்கரைக்குச்
செல்வது உண்டு.

20.ஐஸ் ஹவுஸில் சுவாமி விவேகானந்தரை அப்போது இளம் மாணவராக
இருந்த ஆந்திரா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரான திரு.டி.பிரகாசம்
அவர்கள் சந்தித்தார்.

21.பிப்ரவரி,14 அன்று கல்கத்தாவிற்குப் புறப்படுவதற்கு முன்பு சுவாமி
விவேகானந்தரிடம் சென்னையில் அவரது பணியைத் தொடர்வதற்கு எவரை
யேனும் அனுப்பி வைக்கும்படி அன்பர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.சுவாமிஜி அதற்க்கு,'தென்னகத்தில் உள்ள வைதீகர்களை விட
மிகுந்த வைதீகராக,அதே சமயம்,பூஜை,சாஸ்திர அறிவு மற்றும் இறைத்
தியானத்தில் ஒப்பற்றவராக விளங்கும் ஒருவரை நான் அனுப்பி வைக்கிறேன்
என்று உறுதி அளித்தார்.

22.சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவை அடைந்தவுடன் சுவாமி ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.சுவாமி ராமகிருஷ்
-ணானந்தர்,ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்திக் கலசத்துக்கு வழிபாடு செய்வது மற்றும் மடத்துப் பணிகளை நிர்வகிப்பது ஆகிய பொறுப்புகளை
நிறைவேற்றியவாறு,கல்கத்தா பாராநகர் மடத்தில் அப்போது வசித்து வந்தார்.
பதினோரு நீண்ட ஆண்டுகளாக அவர் அங்கிருந்து வேறெங்கும் சென்ற
-தில்லை.'மடத்தின் முக்கியத் தூண்' என்று சுவாமிஜி அவரைக் குறிப்பிடுவது
உண்டு.

23.சசி மகராஜ் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த சுவாமி ராமகிருஷ்
-னானந்தர் 1897,மார்ச் 17 அன்று சென்னைக்கு வந்தார்.

24.சுவாமி ராமகிருஷ்ணானாந்தர்,திருவல்லிக்கேணியில் இருந்த புளோரா
குடில் என்ற இடத்தில் சிறிது நாட்கள் தங்கிய பின்னர்,ஐஸ் ஹவுசுக்கு இடம்
பெயர்ந்து தனது பணிகளை துவக்கினார்.

25.சுவாமி ராமகிருஷ்ணானாந்தர்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் வேதாந்த வகுப்புகளை நடத்த தொடங்கினார்.சென்னையில் அப்போது புழக்கத்தில் இருந்த ஜட்கா எனப்படும் குதிரை வண்டியை வாடகைக்கு
அமர்த்துவதற்காக அவர் ஐஸ் ஹவுசிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுவரை செல்ல வேண்டியிருந்தது.

26.ஐஸ் ஹவுசில் இருந்தபோது சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பல இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.அவ்வப்போது உண்பதற்கு உணவு கூட
இருக்காது.அப்போதெல்லாம் அவர் 'நீங்கள் என்னைச் சோதனை செய்கிறீர்கள்.எனக்கு உண்பதற்கு எதுவும் கிடைக்காவிடில்,அந்த மணலைக்
கொண்டு வந்து உங்களுக்கு படைத்து விட்டு,அதைப் பிரசாதமாக நான் உண்பேன் என்று கடற்கரை மணலைச் சுட்டிக்காட்டி பூஜையறையில்
ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்திடம் கூறுவார்.ஆனால்,படைப்பதற்கு
தேவையான உணவு எப்படியாவது கிடைத்துவிடும்.

Friday 8 February 2013

விவேகனந்தர் இல்லம் உருவான கதை

ஐஸ் ஹவுஸ்,கேசில் கெர்னன்,மரைன் மேன்ஷன் என்று அழைக்கப்படும் விவேகனந்தர் இல்லம் தென்னிந்திய ராமகிருஷ்ண இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.1897 ஆம் ஆண்டில் ஒன்பது நாட்கள் தன் அனல் பறக்கும் சொற்பொழிவுகளின் மூலம் இந்தியாவின் விழிப்புணர்வை எழச்செய்த சுவாமி விவேகனந்தர் தங்கிய இடம் என்ற பெருமை பெற்றது விவேகனந்தர் இல்லம்.மேலும்,இந்த இல்லம் தென்னிந்தியாவில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை அமைந்த இடம் என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

விவேகனந்தர் இல்லத்தில்தான் சுவாமிஜியின் புகழ்பெற்ற சகோதர சீடர் சுவாமி ராமகிருஷ்னானந்தர்  ஸ்ரீராமகிருஷ்ண  மடத்தில் தற்போது நடைபெற்றுவரும் பல்வேறு நற்பணிகளுக்கு வித்திட்டார்.ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாறு விவேகானந்தர் இல்லத்துடன் ஆழமாக பின்னி பிணைக்கப்பட்டுள்ள ஒரு வரலாறு ஆகும்.இந்த இல்லத்தில் 1999 முதல் சுவாமி விவேகனந்தர் மற்றும்  இந்திய  கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு நிரந்தர கண்காட்சியை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண  நடத்தி  வருகிறது.

விவேகனந்தர் இல்லத்தின்  வரலாறு 60 நிகழ்வுக் குறிப்புகளின் மூலம் இந்த வலைப்பூவில் சொல்லப்போகிறேன்.ஒரு தொடர் வரலாறாக ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தின் வரலாற்றை வழங்குவதுடன்,பல்வேறு காலகட்டங்களில் இங்கு
வாழ்ந்த மற்றும் புரிந்த புகழ்பெற்ற சான்றோர்களையும் இந்த வலைப்பூ தொகுப்பு குறித்துக் காட்டுகிறது.